Sunday 2 June 2013

சுந்தரராமசாமி நினைவுகள்

       அமரர் சுரா நினைவு

 


உங்கள் தந்தை அமரர் சுந்தர ராமசாமிக்குத் தெரிந்த, பழக்கமான எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன்.
புதுக்கோட்டையில் 91 இல் 'ஒரு' என்ற பத்திரிகை நடத்திவந்தபோதும், பிறகு freelance ஆக சென்னையில் பணிபுரிந்தபோதும் எனக்கு சு.ரா.வுடன் கடிதப் போக்கு வரத்து இருந்தது.
அவரை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும், அவரின் மரணச் செய்தி அறிந்த பிறகு ஏன் பார்க்காமல் இருந்தோம் என்கிற துக்க உணர்வே அதிகரிக்கின்றது.
சு.ரா. என்றாலே 'ஜே.ஜே' தான் நினைவுக்கு வருகிறான். இக்கடிதம் எழுதுகிற போதுகூட சு.ரா.வின் மரண சோகம் தாக்காமல், 'ஜே.ஜே: சில குறிப்புக'ளை இன்னொரு முறை படிக்க வேண்டும் என்றுதான் தோணுகிறது. சு.ரா.வை வென்றவன் ஜே.ஜே.
'ஜே.ஜே: சில குறிப்புகள்' ஆகட்டும், பசுவய்யா கவிதைகள் ஆகட்டும் அல்லது சு.ரா. என்கிற தனி மனிதனின் ஆளுமை, நேர்மை, இலக்கிய வீரியம் ஆகட்டும் . . . இவற்றில் எல்லாம் பரந்து கிடக்கும் ஆன்மிகம் என்கிற ஒரு உள்அம்சத்தைப் பலரும் அல்லது அனைவருமே பார்க்கத் தவறிவிட்டனர். அல்லது எதற்கு வம்பு என்கிற ரீதியில் மௌனமாய் இருந்திருக்கலாம். சு.ரா. விற்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, சு.ரா. வுமே கூட அப்படி ஒரு மௌனியாக இருந்திருக்கலாம்.
சு.ரா. தன்னை ஜாதீய ரீதியில் அடையாளம் காட்டிக் கொள்ளாதவர்; பிறரையும் அவர் அப்படிப் பார்த்ததில்லை என்பதில் உண்மை இருக்கலாம். ஆனால், சு.ரா.விடம் ஆன்மிகத் தேடல் என்று எதுவும் இல்லை என்பதை ஏற்பதற்கில்லை. சு.ரா.வின் எழுத்துக்களில் தென்படும் ஆன்மிக அம்சங்களே அவரது ஆன்மிக உணர்வை வெளிப்படுத்தப் போதுமானவை.
இதை நான் தர்க்க ரீதியாகவோ, வாத, பிரதிவாத நோக்கத்திலோ குறிப்பிடவில்லை. அவருடைய எழுத்துக்களைப் படித்தவன் என்கிற அடிப்படையிலும்கூட அவரது ஆன்மிக அடையாளத்தைக் குறிப்பிடவில்லை. சு.ரா.வின் எழுத்துக்கள் என்னைப் பாதித்து - அது எந்த மாதிரியான பாதிப்பு என்று அணுகுகின்றபோது எனக்குக் கிடைக்கும் பதில்: ஆன்மிகம்.
ஜே.ஜே. தனது இயங்குதளத்தில் ஆன்மிக ஒளி கொண்டவனாகவே தெரிகின்றான். ஆன்மிகம் என்றதுமே காவிக் கலரும், உபன்யாசமும், கீதையும், பஜனையும் தான் என்று முன் தீர்மானிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் உள் ஒளியைத் தேடும், நான் அல்லது தான் யார் என்று தேடும், மனித நேயம் தொடங்கி பிரபஞ்ச உணர்வு வரை ஆழ்மனச் சலனங்களால் ஆக்ரமிக்கப்பட்டு அதன் ஆகர்ஷணத்தால் வெளிப்படும் எதுவுமே ஆன்மிகம்தான்.
உலகெங்கும் கணந்தோறும் / இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன / . . . . . . . . /
உன் அடிச்சுவடு ஒவ்வொன்றிலும் / அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்
என்கிற கவிதை வரிகளை எழுதியவர் வெறும் கவிஞனாக இருக்க முடியாது. பசுவய்யாவின் இந்தப் பிரபஞ்ச அறிவை அல்ல . . . பிரபஞ்ச உணர்வை ஆன்மிகமாகப் பார்க்காமல் வேறு எப்படியும் பார்க்க முடியாது என்பதை ஆன்மிகத் தளத்தில் இன்று இயங்குபவன் என்கிற ஆதார அடிப் படையில் என்னால் மிகத் தீர்மானமாகச் சொல்ல முடியும்.
'ஒரு புளிய மரத்தின் கதை'யில், ஓஎத்தனையோ ஆடி மாதங்களைத் தாண்டி வந்துவிட்ட மரம் அது. அதன் மேல் அடித்திருக்கும் வெய்யிலுக்கும், கொட்டியிருக்கும் மழைக்கும், வெடவெடக்க அடித்திருக்கும் வாடைக்கும், ஆடிக் குலைத்திருக்கும் காற்றுக்கும் கணக்கு வழக்கேது? 'என்ன வெயில்!' என்றோ 'என்ன மழை!' என்றோ ஒருபோதும் அலுத்துக்கொண்டதில்லை அதுஔ என்று எழுதுகின்றார் சு.ரா.
இதைச் சமூகப் பார்வையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. சு.ரா.வின் ஆன்மிக மன அதிர்வின் வெளிப்பாடு இது. திரும்பவும் சொல்கிறேன். சு.ரா.வே இந்த விஷயத்தில் மௌனமாக இருந்திருக்கலாம்.
'உயிர்மை' - சு.ரா. நினைவுச் சிறப்பிதழில், ஓவாழ்க்கையைப் பத்தி மிக அதிகமா பேசினவன் வியாசன். வாழ்க்கையைப் பத்தி ஒண்ணும் முடிவா சொல்ல முடியாதுங்கிற வரிக்குக் கீழ மட்டும்தான் அவன்ட்ட கையெழுத்து வாங்க முடியும் . . .ஔ
ஓவியாசன் எல்லாத்தையும் விளக்கிடறான். ஆனா, வாழ்க்கையைப் பத்தின சில முக்கியமான விஷயங்களை விளக்காமலே போறான். அதான் அவன் வாழ்க்கையைப் பத்தி ஆழமா தெரிஞ்சவன்றதுக்கு ஆதாரம். எல்லா தருமங்களையும் தெரிஞ்ச தருமன் ஏன் சூதாடினான்? குடைஞ்சு குடைஞ்சு யோசிச்சாலும் சிக்காது. வியாசனுக்கே அது புரிஞ்சதோ என்னமோ. தெரிஞ்சு போய் கடைசியில, ஓசரி, தெரிஞ்சுதான் இப்ப என்ன?ஔங்கற ஒரு புன்னகைஔ என்று சு.ரா. கூறியதாக ஜெயமோகன் எழுதியிருக்கின்றார்.
வியாசனுக்கு ஒரு நியாயம்; சு.ரா.விற்கு ஒரு நியாயம் என்று இருக்க முடியாது. சு.ரா. வியாசனைப் பற்றிச் சொன்ன விஷயங்கள் சு.ரா.விற்கும் பொருந்தும். சு.ரா.வின் இந்த மௌனத்திற்கு அவரது ஆன்மிக நேர்மை மட்டுமே காரணமாக இருக்கமுடியும்.
சு.ரா. சிறுபத்திரிகைகளை எப்படி நேசித்தார், உற்சாகப்படுத்தினார் என்பதற்கு நான் நடத்திய 'ஒரு' - ஒரு சாட்சி. 'ஒரு' தொடங்குவதற்கு முன்பே, முன்பின் தெரியாதநிலையில் முதல் சந்தாவாக 25 ரூபாய் மணியார்டர் செய்த சு.ரா.வை என்னால் எப்படி மறக்க முடியும்?
'ஒரு' வந்த பிறகும், இதழ் தோறும் சு.ரா.விற்கென 5 பிரதிகள் அனுப்புவது வழக்கம். ஒன்றின் விலை நான்கு ரூபாய். அதைக் கணக்கிட்டு இருபது ரூபாய் அனுப்புவதாக சு.ரா. எழுதிய கடிதத்தை நான் எப்படி மறக்க முடியும்?
சு.ரா.வின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஷீரடி சாயிநாதரைப் பிரார்த்திக்கிறேன்.
எஸ்.எல். நரசிம்மன்
சென்னை
v


இந்த இணைப்பில் மற்ற நினைவுகள் அனைத்தும்...

காலச்சுவடில் வெளியான நினைவுகள்

மலேசியா வாசுதேவன் வாழ்க்கை வரலாறு

மறக்க முடியாத மலேசியா வாசுதேவனின் 
மகத்தான வாழ்க்கை வரலாறு விரைவில்...
எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன் எழுதிக்கொண்டிருக்கிறார்.


 

ஸ்ரீ சாயிமார்க்கம் விழா ஒன்றில் எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்,
மலேசியாவாசுதேவன்,
இந்துமதி,
விக்கிரமன்,
நீதிபதி/எம்.கற்பகவினாயகம்

Saturday 12 March 2011

தினமலர் விமர்சனம்

1.கேள்விநேரம் பேட்டிகளைப் பற்றி தினமலரின் விமர்சனம் பார்க்க:

http://books.dinamalar.com/BookView.aspx?id=9412

Friday 11 March 2011

மலேசியா வாசுதேவனின் மரண உறக்கம்


மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்
   
எஸ்.எல்.நரசிம்மன்


ண்மையில் காலமான மலேசியா வாசுதேவன் உடல் கோதண்டபாணி ஸ்டூடியோவில்  வைக்கப்பட்டிருந்த போது திரை உலகமே திரண்டு வந்து அஞ்சலி செய்தது.எப்போதும் எல்லோரிடமும் பழகும் போதும் அவர் அமைதியாய் பணிவாகவே இருப்பார்.அப்போதும் அப்படி ஒரு அடக்கத்தில் தான் அவர் படுத்திருப்பதாகத் தெரிந்தது.

அவரது அடக்கத்தை அருகில் இருந்து கவனித்தவன் நான்.எட்டாயிரத்திற்கும் மேல் பாடிய அப்பேர்ப்பட்ட சாதனையாளரா நம்மோடு இவ்வளவு அன்பாய் இத்தனை நெருக்கமாய் இருந்தார் என பிரமித்துப் போன நாட்கள் பல.

ஷிர்டி சாயிபாபா மீது அவர் வைத்திருந்த ஈடுபாடே அவர் பால் என்னையும் என் பால் அவரையும் இழுத்துக் கொண்டு போனது.

எதற்கும் அலட்டிக் கொள்ளாத மனிதர்.ஓ...அப்படியா?..சரி....என்று பேச்சிலும் நிதானத்தைக் கொண்டிருந்தவர்.வறுமை அவரை வாட்டியபோதும் அவர் அலட்டிக் கொண்டதில்லை." இன்று நான் சாப்பிட வேண்டிய சோற்றுப் பருக்கையில் என் பெயர் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே அதை நான் இன்று சாப்பிட முடியும் " என்பதில் மிக கவனமாக இருந்தார்.

சாயிபாபா பக்தர்கள் வட்டாரத்தில் கூட அவர் ஒரு பாடகராக வில்லன் நடிகராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்.ஆனால் அவர் இவற்றை எல்லாம் தாண்டிய மகாயோகியாகவே வாழ்ந்திருக்கிறார்.வருவது வரட்டும்..போவது போகட்டும்.... என்று அவர் சலித்துக் கொண்டதில்லை.எல்லாவற்றையும் அவர் மனதார ஏற்றுக் கொண்டார்.அந்த மன நிலையிலேயே அவரின் தேடுதல் இருந்தது.

"இளையராஜா எனக்கு உதவி பண்ணலைன்னு வருத்தப்படலை.எங்க இருக்கே?எப்படி இருக்கே?ன்னு ஒரு அன்பான வார்த்தை.அது கிடைக்கலைன்னு தான் வருத்தம்?

இளையராஜாவிடம் மட்டும் இல்லை.அவரது உறவினர்களிடமும் என்னைப் போன்ற நன்பர்களிடமும் கூட அவர் எதிர்பார்த்தது இந்த விசாரிப்பை மட்டுமே.

அது கிடைக்காமல் அந்த  வேதனையிலேயே மனம் நொந்து செத்திருக்கிறார் என்பதே உண்மை.மலேசியாவில் அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து அவரால் பாட முடியாமல் போய்விட்டது.அது இன்னொரு வேதனை.

எல்லாமாகச் சேர்ந்து அவருக்குள் ஒரு ஆத்ம விசாரம் ஆரம்பமாகி அதுவே ஷிர்டி சாயிபாபா விடம்  அடைக்கலம் ஆகவும் காரணமானது.சூர்யா ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துப் போன சில நாட்களுக்கு முன் கூட அவர் சாயி சத்சரித்திரம் படிக்கக் கேட்பதாக உஷா வாசுதேவன் எனக்கு
ஃபோன் செய்திருந்தார்.


சாயிபாபா தொடர்பாக நான் எழுதிய புத்தகவெளியீட்டு விழாவில் அவர் பேசிய போது கூட  " இத்தனை வருஷமா தப்பு தப்பான பாட்டா பாடிட்டேன்.பாடினது போதும்.பேசாம இருன்னு பாபா சொல்லிட்டாரு.இனிமே பாபா பாட்டை மட்டும் தான் பாடுவேன்." என்று தன் பக்தி உணர்வையே வெளிப்படுத்தியிருக் கிறார்.இந்த உணர்வு தான் சினிமா உலகில் இருந்து அவரை  கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க வைத்திருக்கிறது.

அவர் அடைக்கலம்  ஆன இன்னொரு இடம் கவிதை." பாட முடியாட்டி என்ன? எழுத முடியுதில்ல" என அப்போதும் ஒரு தேடல். தன்னைத் துரத்திய வாழ்க்கையைப் பார்த்து பயந்து போகாமல் அதே   வாழ்க்கையைத் துரத்தித் துரத்தி வாழ்ந்தவர் அவர்.அவரது உண்மையான சாதனை இது தான்.

அவர் கவிதைகள் எழுதுவது பலருக்கும் தெரியாது.எனக்கும் தெரியாது.
."எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது " என்கிற அவரது கவிதை புத்தகத்தை திடீர் என ஒரு நாள் " சர்ப்ரைஸாகக் கொடுத்து அபிப்ராயம் கேட்ட போதுதான் அவர் கவிதைகள் எழுதுகிற விஷயம் தெரியும்.மரண உறக்கம் என்கிற தலைப்பிலும் அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிரார்.

அப்புத்தக வெளியீட்டு விழாவை முதலில் சென்னையில் நடத்துவதாக இருந்தது.பிறகு பாபுஜி என்கிற  நண்பர் மூலமாக பாண்டிச்சேரி கம்பன் கழகம் சார்பில்  விழா நடந்தது.பாண்டிச்சேரி மாநில முன்னாள்  முதல்வர் ரெங்கசாமி,கவிஞர்கள் பிறைசூடன்,இளந்தேவன்,எழுத்தாளர் இந்துமதி எல்லாம் கலந்து கொண்டார்கள்.




அந்த விழா ஏற்பாட்டின் போது சினிமா சம்பந்தப்பட்ட ஒரு சிலரை  அழைக்கலாம் என மலேசியா வாசுதேவனிடம் நான் வலியுறுத்திய  போது வேண்டாம் வேண்டாம் என்று  தீர்மானமாகவும் கண்டிப்பாகவும் மறுத்து விட்டார்.


இப்புத்தகம் வெளிவரக் காரணம் மலேசியா வாசுதேவனின் பால்யகால நண்பர்
பேராசிரியர் டாக்டர்.அனந்தன் கிருஷ்ணன்.


மலேசியா வாசுதேவன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அதாவது மிகவும் பிசியாக இருந்த நேரத்தில்  இவர் அருகில் இல்லை.நண்பர் நொடிந்து போயிருப்பதாகக் கேள்விப்பட்டு தானாகத் தேடி வந்து நட்பை புதிப்பித்துக் கொண்டவர்.மலேசியா வாசுதேவனின் இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்த அன்று சாயந்திரம் கிரீன்பார்க் -கில் டாக்டரோடு பேசிக்கொண்டிருந்தேன்.


" எனக்கும் அவனுக்கும் ஆன நட்பு எல்லாவற்றையும் தாண்டிய நட்பு.என் அம்மா உயிர் பிழைப்பதற்காக இரத்தம் கொடுத்தவன் வாசு.அவனை நான் எப்படி மறக்க முடியும்? எங்கள் நட்பு ஆத்ம ரீதியிலானது.SOUL WITH SOUL.அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது" என்றார் டாக்டர்.

பதிலுக்கு அவரிடம் ," நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியாது டாக்டர்..ஆனால் மனசாட்சி இல்லாதவர்களால் மலேசியா வாசுதேவனை புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் இன்று புரிந்தது." என்றேன்.


                                                               
                                                             










உயிர்மை விமர்சனம்