Saturday 12 March 2011

தினமலர் விமர்சனம்

1.கேள்விநேரம் பேட்டிகளைப் பற்றி தினமலரின் விமர்சனம் பார்க்க:

http://books.dinamalar.com/BookView.aspx?id=9412

Friday 11 March 2011

மலேசியா வாசுதேவனின் மரண உறக்கம்


மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்
   
எஸ்.எல்.நரசிம்மன்


ண்மையில் காலமான மலேசியா வாசுதேவன் உடல் கோதண்டபாணி ஸ்டூடியோவில்  வைக்கப்பட்டிருந்த போது திரை உலகமே திரண்டு வந்து அஞ்சலி செய்தது.எப்போதும் எல்லோரிடமும் பழகும் போதும் அவர் அமைதியாய் பணிவாகவே இருப்பார்.அப்போதும் அப்படி ஒரு அடக்கத்தில் தான் அவர் படுத்திருப்பதாகத் தெரிந்தது.

அவரது அடக்கத்தை அருகில் இருந்து கவனித்தவன் நான்.எட்டாயிரத்திற்கும் மேல் பாடிய அப்பேர்ப்பட்ட சாதனையாளரா நம்மோடு இவ்வளவு அன்பாய் இத்தனை நெருக்கமாய் இருந்தார் என பிரமித்துப் போன நாட்கள் பல.

ஷிர்டி சாயிபாபா மீது அவர் வைத்திருந்த ஈடுபாடே அவர் பால் என்னையும் என் பால் அவரையும் இழுத்துக் கொண்டு போனது.

எதற்கும் அலட்டிக் கொள்ளாத மனிதர்.ஓ...அப்படியா?..சரி....என்று பேச்சிலும் நிதானத்தைக் கொண்டிருந்தவர்.வறுமை அவரை வாட்டியபோதும் அவர் அலட்டிக் கொண்டதில்லை." இன்று நான் சாப்பிட வேண்டிய சோற்றுப் பருக்கையில் என் பெயர் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே அதை நான் இன்று சாப்பிட முடியும் " என்பதில் மிக கவனமாக இருந்தார்.

சாயிபாபா பக்தர்கள் வட்டாரத்தில் கூட அவர் ஒரு பாடகராக வில்லன் நடிகராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்.ஆனால் அவர் இவற்றை எல்லாம் தாண்டிய மகாயோகியாகவே வாழ்ந்திருக்கிறார்.வருவது வரட்டும்..போவது போகட்டும்.... என்று அவர் சலித்துக் கொண்டதில்லை.எல்லாவற்றையும் அவர் மனதார ஏற்றுக் கொண்டார்.அந்த மன நிலையிலேயே அவரின் தேடுதல் இருந்தது.

"இளையராஜா எனக்கு உதவி பண்ணலைன்னு வருத்தப்படலை.எங்க இருக்கே?எப்படி இருக்கே?ன்னு ஒரு அன்பான வார்த்தை.அது கிடைக்கலைன்னு தான் வருத்தம்?

இளையராஜாவிடம் மட்டும் இல்லை.அவரது உறவினர்களிடமும் என்னைப் போன்ற நன்பர்களிடமும் கூட அவர் எதிர்பார்த்தது இந்த விசாரிப்பை மட்டுமே.

அது கிடைக்காமல் அந்த  வேதனையிலேயே மனம் நொந்து செத்திருக்கிறார் என்பதே உண்மை.மலேசியாவில் அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததில் இருந்து அவரால் பாட முடியாமல் போய்விட்டது.அது இன்னொரு வேதனை.

எல்லாமாகச் சேர்ந்து அவருக்குள் ஒரு ஆத்ம விசாரம் ஆரம்பமாகி அதுவே ஷிர்டி சாயிபாபா விடம்  அடைக்கலம் ஆகவும் காரணமானது.சூர்யா ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துப் போன சில நாட்களுக்கு முன் கூட அவர் சாயி சத்சரித்திரம் படிக்கக் கேட்பதாக உஷா வாசுதேவன் எனக்கு
ஃபோன் செய்திருந்தார்.


சாயிபாபா தொடர்பாக நான் எழுதிய புத்தகவெளியீட்டு விழாவில் அவர் பேசிய போது கூட  " இத்தனை வருஷமா தப்பு தப்பான பாட்டா பாடிட்டேன்.பாடினது போதும்.பேசாம இருன்னு பாபா சொல்லிட்டாரு.இனிமே பாபா பாட்டை மட்டும் தான் பாடுவேன்." என்று தன் பக்தி உணர்வையே வெளிப்படுத்தியிருக் கிறார்.இந்த உணர்வு தான் சினிமா உலகில் இருந்து அவரை  கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க வைத்திருக்கிறது.

அவர் அடைக்கலம்  ஆன இன்னொரு இடம் கவிதை." பாட முடியாட்டி என்ன? எழுத முடியுதில்ல" என அப்போதும் ஒரு தேடல். தன்னைத் துரத்திய வாழ்க்கையைப் பார்த்து பயந்து போகாமல் அதே   வாழ்க்கையைத் துரத்தித் துரத்தி வாழ்ந்தவர் அவர்.அவரது உண்மையான சாதனை இது தான்.

அவர் கவிதைகள் எழுதுவது பலருக்கும் தெரியாது.எனக்கும் தெரியாது.
."எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது " என்கிற அவரது கவிதை புத்தகத்தை திடீர் என ஒரு நாள் " சர்ப்ரைஸாகக் கொடுத்து அபிப்ராயம் கேட்ட போதுதான் அவர் கவிதைகள் எழுதுகிற விஷயம் தெரியும்.மரண உறக்கம் என்கிற தலைப்பிலும் அதில் ஒரு கவிதை எழுதியிருக்கிரார்.

அப்புத்தக வெளியீட்டு விழாவை முதலில் சென்னையில் நடத்துவதாக இருந்தது.பிறகு பாபுஜி என்கிற  நண்பர் மூலமாக பாண்டிச்சேரி கம்பன் கழகம் சார்பில்  விழா நடந்தது.பாண்டிச்சேரி மாநில முன்னாள்  முதல்வர் ரெங்கசாமி,கவிஞர்கள் பிறைசூடன்,இளந்தேவன்,எழுத்தாளர் இந்துமதி எல்லாம் கலந்து கொண்டார்கள்.




அந்த விழா ஏற்பாட்டின் போது சினிமா சம்பந்தப்பட்ட ஒரு சிலரை  அழைக்கலாம் என மலேசியா வாசுதேவனிடம் நான் வலியுறுத்திய  போது வேண்டாம் வேண்டாம் என்று  தீர்மானமாகவும் கண்டிப்பாகவும் மறுத்து விட்டார்.


இப்புத்தகம் வெளிவரக் காரணம் மலேசியா வாசுதேவனின் பால்யகால நண்பர்
பேராசிரியர் டாக்டர்.அனந்தன் கிருஷ்ணன்.


மலேசியா வாசுதேவன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அதாவது மிகவும் பிசியாக இருந்த நேரத்தில்  இவர் அருகில் இல்லை.நண்பர் நொடிந்து போயிருப்பதாகக் கேள்விப்பட்டு தானாகத் தேடி வந்து நட்பை புதிப்பித்துக் கொண்டவர்.மலேசியா வாசுதேவனின் இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்த அன்று சாயந்திரம் கிரீன்பார்க் -கில் டாக்டரோடு பேசிக்கொண்டிருந்தேன்.


" எனக்கும் அவனுக்கும் ஆன நட்பு எல்லாவற்றையும் தாண்டிய நட்பு.என் அம்மா உயிர் பிழைப்பதற்காக இரத்தம் கொடுத்தவன் வாசு.அவனை நான் எப்படி மறக்க முடியும்? எங்கள் நட்பு ஆத்ம ரீதியிலானது.SOUL WITH SOUL.அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது" என்றார் டாக்டர்.

பதிலுக்கு அவரிடம் ," நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ள முடியாது டாக்டர்..ஆனால் மனசாட்சி இல்லாதவர்களால் மலேசியா வாசுதேவனை புரிந்து கொள்ள முடியாது என்பது மட்டும் இன்று புரிந்தது." என்றேன்.


                                                               
                                                             










உயிர்மை விமர்சனம்